Thursday, December 20, 2012

மார்கழியில் அவிட்டத்தில் வந்த வள்ளல் வாழியே

மார்கழியில் அவிட்டத்தில் வந்த வள்ளல் வாழியே 

வள்ளல் 

"மார்கழியில் அவிட்டத்தில் வந்த வள்ளல் வாழியே" - இது ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் வாழித் திருநாமத்தில் பொறித்து வைக்கப் பட்டுள்ள வாசகம் ஆகும். வள்ளல் என்னும் வார்த்தையை பெரிய ஜீயர் தமது உபதேச ரத்தினமாலையில் இவரது திருத்தகப்பனாரை குறித்து பிரயோகப்படுத்தியுள்ளார்.(திருத்தகப்பனாரிடம் உள்ள குணமானது ஸ்வாமியிடமும் உள்ளது என நிர்வாகிக்கவும் குறையில்லை. அம்பரமே, தண்ணீரே, சோறே என்ற பாட்டுக்கு கிருஷ்ணனிடம் இத்தகைய குணங்கள் இருப்பதினாலே வசுதேவரிடம் இது உள்ளதாக வ்யாக்யாநிக்கப்பட்டுள்ளது)  அதற்க்கு வ்யாக்யானமிட்டருளிய பிள்ளைலோகம் ஜீயர் வள்ளல் என்பதற்கு -  ஔதார்யமுடைய என குறித்துள்ளார். ஔதார்யம் என்னும் குணமானது   தம்மிடம் இருக்கும் செல்வத்தை ஒன்றும் ஒளிக்காமல் கருணையுடன் அனைவருக்கும் (பின்புள்ளாரும் அறியும்படி) கொடுப்பது என்பது உலக வழக்கு. இதன் மூலம் இத்தகைய குணமுடையவர்க்கு - செல்வம் மிகுந்திருக்கும் என்பதுவும் , அதை அவர்கள் அனைவருக்கும் கருணையுடன் விநியோகிப்பார்கள் என்பதுவும் தேறி நிற்கும். இப்பொழுது நாம் இந்த வள்ளல் சப்தமானது  ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரிடம் குடி கொண்டிருப்பதை சிறிது அனுபவிக்கலாம்.


அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் 
நமது ஆசார்யர்கள் செல்வமாகக் கருதுவது ஞானமும் கைங்கர்யமுமே ஆகும். அதிலும் நமது ஆச்சார்யர்களின் ஞானத்தை பற்றி பேச நமக்கு அருகதை தான் உண்டோ? நமது ஆசார்யஸார்வபௌமர்கள் ஞானத்திலே பரத்வத்தையும்; கருணையினால் அத்தகைய ஞானத்தை பின்புள்ளாரும் அறியும்படி ஏடுபடுத்துவதில் சௌசீல்யத்தையும் காட்டி நிற்பர்கள்.

பரத்வம்

பரத்வம் என்றால் மேன்மை என்று பொருள். மேன்மையான ஞானமானது அருளிச்செயல் ஞானமே ஆகும்.  இது எப்படி பொருந்தும் என்னில் - ஆச்சார்ய ஹ்ருதயம் 16வது சூர்ணிகையில் விஷ்ணு காயத்ரியின் மேன்மையை விளக்கும் பொருட்டு ஸ்வாமி கைக்கொண்டுள்ள ஸ்லோகமும் , அதற்க்கு ஸ்ரீ மணவாள மாமுனிகள் அருளிய வியாக்யானமும் சேவிக்கும் கால் நன்கு விளங்கும். இந்த பிரமாணத்தின் மூலம் அனைத்திலும் விஷ்ணு காயத்ரி மேம்பட்டது என்று தேறி நிற்கும். அதிலும் முமுக்ஷுப்படி கொண்டு நோக்குங்கால் விஷ்ணு காயத்ரியில் பிரதம பதமான திருமந்த்ரம் (நாராயணா) மற்ற இரண்டிலும் (வாஸுதேவன், விஷ்ணு)  மேம்பட்டது என்று தேறி நிற்கும். த்வயம் திருமந்த்ரத்திர்க்கு விவரணமாகவும்; சரம ஸ்லோகம் த்வயத்திற்கு விவரணமாகவும் இருக்கிறது என்பது பூர்வர்கள் நிர்வாகம். இதன் மூலம் இம்மூன்றும் மற்றவற்றில் காட்டில் மிகவும் மேம்பட்டது என்பது.

தொட்ட தொட்ட இடம் தோறும் இந்த ரஹஸ்யத்த்ரயம் பொதிந்துள்ள அருளிச் செயலின் மேன்மையை பற்றி சொல்லவும் வேண்டுமோ? அத்தகைய அருளிச் செயல் என்னும் திராவிட வேதத்தை தன் நாவினால் கடைந்தவர் இவ்வாசிரியர் என்பது மிகையன்று. இது இவரது ஆசார்ய ஹ்ருதயம் என்னும் அற்புத கிரந்தம் கொண்டு தெளியலாம்.

ஆசார்ய ஹ்ருதயம்/மாறன் மனம் என்பது நம்மாழ்வாரின் பெருமைகளையும் அவரது திருவாய்மொழியின் ஆழ் பொருள்களையும்; அதற்க்கு ஈட்டில் உள்ள விளக்கங்களையும் உள்ளடக்கியது. இந்த கிரந்தம் அமைந்த நடையானது அதி அற்புதமானது. முழுவதும் அருளிச் செயல் சந்தைகளைக் கொண்டே சூர்ணிகைகள் அமைக்கப்பட்டுள்ளன (மற்ற பிரமாணங்கள் இருந்த போதிலும் அருளிச் செயல் சந்தைகளே அதிகம்). வெறும் சந்திகளுக்கு (வார்த்தை சேர்க்கை) மட்டுமே தமது சொந்த சொற்களை ஸ்வாமி உபயோகப்படுத்தியுள்ளார். இவ்வொப்பற்ற நூலுக்கு அவதாரிகை அருளிய விசதவாக்சிகாமணியாகிய  ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருவாக்கினால் இதனை சிறிது அனுபவிப்போம்

"..... மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள்  பேசின திவ்யசூக்திகளாகையாலே ஆப்ததமமுமாய் அத்யந்தபோக்யமுமாய் இருக்கிற இதுவே தமக்கு அநவரதாபிமதமாகையாலும், முகமறிந்தவன் கோத்த முத்து  பெருவிலையனாமாப்போலே சந்தைகளைத் தாம் சேர்த்த சாதுர்யத்தாலே அருளிச் செயலில் ரஸஞயற்கு இதில் அர்த்தத்திலு காட்டில் சப்தந்தானே மிகவும் இனிதாயிருக்கும் ....."

இப்படி இருக்கும் அழகை சிறிது அனுபவிப்போம்.

சூர்ணிகை#127. இதில் நம்மாழ்வர்க்கும் பரதாழ்வானுக்கும் ஸாம்யம் காட்டும் படியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மூலம் என்ன இருக்கிறது என்றால் -

"....அன்னையென் செய்யிலென் ராஜ்யமும் யானே என்று பெருஞ் செல்வமும் இச்சியாமல் வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும் கண்ணநீர் பங்கமாக நிலம் துழாவிக் குடிக் கிடந்த கையறவும், .... "

இந்த சூர்ணிகையில் ஸ்வாமி தெரிவிக்க விழையும் விஷயம் என்  என்னில் - எப்படி ஸ்ரீ பரதாழ்வான், கைகேயியை சீறி (ராஜ்ஜியம் ஆளச் சொன்னதினால்), ராஜ்யமும் தாமும் பெருமாளுக்கு சேஷம் என்று சொல்லி, அவரிடம் சென்று வேண்டி, பெருமாள் இசையாமல் திருவடி நிலையை கொடுத்தருள, அதை சிரஸாவஹித்து, பெருமாள் திரும்பி வருமளவும் கண்ணீரினால் உண்டான சேற்றிலே நனைந்து,இஷ்வாகு வம்ச மரியாதை மாறாமல் (மூத்தவனே அரசாள வேண்டும்) இருந்தாரோ அதே போன்று ஆழ்வாரும் இருந்தார் - என்பதே. இதை மேற்காட்டிய மூல சூர்ணிகை கொண்டு தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏன் என்னில் -

அன்னையென் செய்யிலென் - திருவாய்மொழி 5ம் பத்து ஆழ்வார் அன்னையரை நோக்கிக் கூறுவது
ராஜ்யம்  - ராஜ்யஞ சாஹஞ்ச ராமஸ்ய - ஸ்ரீ ராமாயணம் -  
யானே - "யானே நீ என்னுடைமையும் நீயே" - ஆழ்வார் பெருமாளுக்கு சேஷி என்று தெரிவித்தது
பெருஞ் செல்வம் - "கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ் செல்வம்" - ஆழ்வார் செல்வத்தை வெறுத்தது
வேண்டிச் சென்று - "வேங்கட வாணனை வேண்டிச் சென்று" - ஆழ்வார் திருபுளியாழ்வார் அடியிலே இருந்த போதிலும் திருவேங்கடம் சென்று சேவிக்கப் பாரித்தது
திருவடியே சுமந்து - "திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை" - ஆழ்வார் அவன் அருளிய திருவடிகளை சிரஸாவஹித்து - பெருமாள் மோக்ஷம் தரும் வரையிலும்
கண்ணநீர்  துழாவிக்  - "கண்ணநீர் கைகளாலிறைக்கும்" "இருநிலம் கைதுழாவிருக்கும்" - ஆழ்வார் பட்ட பாடு
குடிக் கிடந்த -  "குடிக் கிடந்தாக்கம் செய்து" - ஆழ்வார் இந்நிலவுலக்கத்தில் இருக்கும் வரையிலும் ப்ரபன்ன மரியாதை (ஈஸ்வரன் வந்து கைக்கொள்ளும் வரை பொறுமையுடன் இருப்பது) தப்பாமல் இருந்ததையும்

மேற்கூறிய விளக்கத்தினால் ஸ்வாமி தாம் சொல்ல விழைந்ததை அருளிச் செயல் சந்தைகளைக் கொண்டே எப்படி அற்புதமாக விளக்கினார் என்பது தேறியிருக்கும்.(இன்னும் இது காஞ்சி ஸ்வாமி மொழி கொண்டு அனுபவித்தால் பேரின்பம் பயக்கும்). இன்னமும் ஒரு அற்புதமான நடை ஒன்று வெளிப்படும் - சாதாரணமாக மேற்கோள் காட்டும் நடைமுறை எப்படி என்னில்; ஒரு விஷயத்தை சொற்றொடரினால் வெளியிட்டு அதற்க்கு ஆதாரம் இதோ என பின்னால் வெளியுடுவதே ஆகும். உதாரணத்திற்கு "ஸத்யம்  ஸத்யம் புன:  இத்யாதிப்படியே எம்பெருமானாரே ஜெகதாசார்யர் ஆகிறார்" என்னும் வாசகத்தில் எம்பெருமானாரே ஜெகதாசார்யர் என்பது வாக்கியம்; அதற்க்கு பிரமாணம்/மேற்கோள்  ஸத்யம்  ஸத்யம் என்பதாகும்.

ஆனால் ஸ்வாமியின் நடையை ஆசார்ய ஹ்ருதய சூர்ணிகைகளில்  உற்று நோக்கினால், ஆழ்வார் அங்ஙனம் இருந்ததற்கு பிரமாண வசனமான மேற்கோள்களைக் கொண்டே வாக்கியம் அமைத்த சாமர்த்தியம் நம்மால் பேசத் தான் முடியுமா?  (இப்போது மாமுனிகளின் திருவாக்கினை மீண்டும் ஒருமுறை சேவித்தால்; ஸ்வாமி இத்தகைய சாமர்த்தியத்தை, தமது விசதவாக்சிகாமணி என்னும் விருதுக்கேற்ப கொண்டாடுவது விளங்கும்)  அதிலும் ஒரே வாக்யம் ஆழ்வார் படியையும் பரதாழ்வான் நிலையையும் தெரிவிப்பது அதி ஆச்சரியமல்லவா? இத்தகைய அதிமானுஷ க்ருத்யங்கள் இக்க்ரந்தம் தோறும் இருப்பதை கண்டே பெரியோர்கள் இதற்க்கு நிகரான க்ரந்தம் ஸ்ரீவைஷ்ணவ உலகத்தில் "ந பூதோ ந பவிஷ்யதி" என்று கொண்டாடுவர்கள்.

சௌசீல்யம் 


சௌசீல்யமாவது மேன்மையானவன் கீழ் நிற்பவர்களோடு கலந்து பரிமாறுவது - இது ஞானத்தில் எடுத்துக் கொண்டால் பெரியவர்களான ஆசார்யர்கள் நமது மந்த மதிக்கும் அர்த்தமாகும்படி ஏடுபடுத்தி போகும் கல்யாண குணம் என்னலாம். ஸ்வாமி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், திருப்பாவை, கண்ணிநுண்சிறுதாம்பு, அமலனாதிபிரான் ஆகிய அருளிச் செயல்களுக்கு வ்யாக்யானம் அருளியுள்ளார். ஸ்வாமி மட்டும் 4000 திவ்ய பிரபந்தங்களுக்கும் வ்யாக்யானம் அருளியிருந்தால் இந்த உலகத்தில் குரு-சிஷ்ய உறவே கெட்டுப்போய் இருக்கும் என்று சம்ப்ரதாயம் வல்ல பெரியோர்கள் பணிப்பர் (ஸ்வாமி அவ்வளவு விரிவாக ஐயம் திரிபு இன்றி வ்யாக்யானிப்பார் என்பது பொருள்). இது அதிசயோக்தி அன்று என்பதை கீழ் அனுபவித்து மகிழலாம்.

திருப்பாவைக்கு பெரிய ஆச்சான் பிள்ளை 3000 படியும், அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் 6000 படியும், திருநாராயணபுரத்து ஆய் 2000 படி மற்றும் 4000 படி வ்யாக்யானங்கள் அருளியுள்ளனர். இவற்றுள் எண்ணிகையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிய 6000 படியே அதிகமானது என்பது கையிலங்கு நெல்லிக்கனி. இதிலிருந்தே இது எவ்வளவு விரிவானது என்பதை உணரலாம். இன்றைக்கும் மஹான்கள் திருப்பாவை ப்ரவசனம் செய்வது இதன் துணை கொண்டே என்பது பெரியோர்களின் வாக்கு. உதாரணத்திற்கு ஒரு இடம் பார்க்கலாம் 

முதல் பாட்டு - சீர்மல்கும் ஆய்ப்பாடி - 3000 படி 
இவ்வூரில் ஐஸ்வர்யம் வழிந்து போய் வேறோர் ஊருக்கு வெள்ளமிடப்போந்திருக்கை. அதாவது - கிருஷ்ணனுடைய இங்குத்தை நீர்மை  பரமபதத்திலும் சென்று அலை எறியும்படியாய் இருக்கை. வஸ்துவுக்கு குணத்தாலேயிறே உத்கர்ஷம். அங்கு தன்னிற் குறைந்தாரில்லாமையினாலே குணத்துக்கு விஷயமில்லை.; ஆகையாலே, தர்மியை பற்றிக்கிடக்கும் அத்தனை அங்கு; அந்தகாரத்திலே தீபம் போலே பிரகாசிப்பதும் இங்கேயாகையாலே, ஐஸ்வர்யம் பூரணமாய்த்து இங்கேயிறே. த்ரிபாத் விபூதியில் அடங்காத வஸ்து, தன்னை ந்யாம்யமாக்கி வர்த்திக்கிற ஊரிறே. பண்டே கோஸம்ருத்தியுண்டாய் இருக்கச் செய்தே, பிள்ளைகள் கால்நலத்தாலே கறப்பன கடைவனவற்றால் குறைவற்றிருக்கை; நாழிப்பால் நாழிநெய் போருகை என்றுமாம். 

முதல் பாட்டு - சீர்மல்கும் ஆய்ப்பாடி - 6000 படி 
பண்டே  பலகாலும் வெண்ணையாலும் ஸம்ருத்தமாய் இருக்கச் செய்தே, உபய விபூதியுக்தன் பிறந்த ஐஸ்வர்யமுமுண்டிறே பஞ்சலக்ஷம் குடியையுடைத்தாய், அவர்களுக்கு தனமான பசு முதலான சம்பத்தாலே ஸம்ருத்தமாய், அதுதான் பிள்ளைகள் கால்நலத்தாலே ஒன்று இரட்டியாய் "ப்ரீதிரோதமஸஹிஷ்ட ஸா புரீ" என்னும்படியிறே சம்பத்து மிகுந்திருக்கும்படி (சீர்மல்கும் ஆய்ப்பாடி) இங்குத்தை ஐஸ்வர்யத்தினுடைய வாய்கால் காணும் நித்யவிபூதியில் ஐஸ்வர்யம்; குணாதிக்யத்தாலிறே வஸ்துவுக்கு ஏற்றம்; அது உள்ளது இங்கேயிறே. தர்மி அதுவாகையாலே மேன்மையும் இங்கே உண்டு. நீர்மை தன்னேற்றமாம். அங்கு தான் கும்பீடு கொண்டிருக்கும்; இங்கு தான் கும்பிடும் இடமிறே. "தொழுகையும் இவை கண்ட அசோதை" என்னகடவதிறே. இது காண்கைகாகவிறே வைதிக புத்ரர்கள்  வ்யாஜ்யத்தால் நாய்ச்சிமார் அழைத்துக் கண்டது. இவ்விடத்திலே ஐஸ்வர்யம் அதிலும் விஞ்சியிருக்கும் என்னுமிடம் - கண்ணாலே காணலாகிறதே. மனுஷ்யத்வே பரத்வமிறே இங்கு.

இதன் மூலம் ஸ்வாமி அருளிய வ்யாக்யானம் விரிவாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாய் இருப்பதைக் காணலாம். இது ஒரு சிறு திவலையே. ஸ்வாமியின் வ்யாக்யானத்தில் ஆழ்ந்து அனுபவித்தால் இது போன்று எங்கும் பரந்து இருப்பதைக் காணலாம்.


ஆர்யஸ் சௌம்யவரஸ் சடாரிகலிஜித்பட்டேச முக்யாத்மநாம் 
பக்தாநாம் விமலோக்திமௌக்திகமணீநாதாய சக்ரே ப்ருசம் 
க்ருத்வா ஸாதுரஹஸ்யத்ரயாரத்தமகிலம் கூடம் விபச்சித்ரம் 
லோகார்யவரஜஸ் ஸுசிஷ கவரச் சூடாமணி சோபதே ||

[பிள்ளையுலகாசிரியரின் திருதம்பியராய், ஸத்சம்ப்ரதாயாத்தங்களை நன்றாக சிக்ஷித்து அருளி செய்பவராய் அனைவராலும் தலையில் மணி போலே தரிக்கத்தக்கவரான அழகிய மணவாள பெருமாள் நாயனார் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார், முதலான ஆழ்வார்களின் குற்றமற்ற வாக்குகளாகிற முத்து, மாணிக்கங்களை கொண்டு ரஹச்யத்த்ரயத்தின் ஆழ் பொருள்களையெல்லாம் பூர்வர்களின் திருவுள்ளத்திற்கு இசைய விளக்கி மிகவும் விளக்கமுறுகிறார் - அத்தகயவரை  அடிபணிகிறேன் ]


மன்னுபதின்மர் மறைப்பொருளில் மாறன்சீர் 
துன்னு மதுரகவி சொற்பொருளு மன்னநடை 
திங்கண்முகவல்லியுரை செம்போருளுந் தென்முடும்பை 
எங்கண் மணவாளர்க்கிறை 

4 comments:

 1. very wonderful swamy - let there be more like these.
  adiyen sarathy ramanuja dasan

  ReplyDelete
 2. வெகு அற்புதம் ஸ்வாமின்.

  மேன்மை, சௌசீல்யம் ,இதோ ஒன்று

  தைரியம் : அக்காலத்தில் திராவிட பாஷை என்றால் ஏற்றுக்கொள்வதில ஒரு தயக்கமும், இகழவும் இருந்தாது.
  வீட்டின்ப இன்பப பாக்கலில..இன்ப மாரியில் ஆராய்ச்சி. அது மாத்ரு யோனி பரிக்ஷயோடு ஒக்கும் என்று தெள்ளத் தெளிவாக தயிரியமாக எடுத்துரைத்தார்.

  மேலும், உறங்குவான் கைப்பண்டம் போலே நழுவும் என்று சொல்லி கர்மம் கைங்கர்யத்தில் புகும் என்று போட்டாரே ஒரு போடு.

  பேச்சு பார்க்கில் கள்ள நூல் தானும் க்ராஹ்யன்க்கள் . பிறவிப் பார்க்கில் அஞ்சாம் ஒத்தும் அறு முன்றும் கழிப்பானம் என்று தயதாக்ஷண்யம் இல்லாமல் முழங்கியது என் என்று சொல்வது.
  தயிரியம்'

  ReplyDelete
  Replies
  1. dasan adiyen was planning to put "பேச்சு பார்க்கில் கள்ள நூல் ..." as a seperate article swamy.

   Delete