Friday, October 12, 2012

இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தார்


 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

கற்றோர்கள் தாமுகப்பர் கல்வி தன்னில் ஆசையுள்ளோர் 
பெற்றோம் என உகந்து பின்பு கற்பர் - மற்றோர்கள் 
மாச்சர்யத்தால் இகழில் வந்ததேன் நெஞ்சே இகழ்கை 
ஆச்சர்யமோ தான் அவர்க்கு.

நமது ஸ்ரீவைஷ்ணவ உலகமானது நிச்சலும் "ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர்" திருவடிகளே சரணம் என ஓதி வருவதை காண்கிறோம். நமது ஒப்பிலாத ஒராண் வழி குருபரம்பரையானது பெரிய பெருமாள் தொடக்கமாக ஸ்ரீ மணவாள மாமுனிகள் பர்யந்தம், ஸ்வாமி உடையவரை நடுவாகக் கொண்ட ரத்ன ஹாரமாக விளங்குவதை காண்கிறோம்.

இனி எப்படி உடையவர், நம்மாழ்வாருக்கு பிராண பூதராய், திருவடி நிலையாய், மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆகிறார் எனவும்; மணவாள மாமுனிகள் உடையவரின் மீது ப்ராவண்யம் உடையவராய், அதுவே அவர்க்கு விஷேஷமாய் திகழுவதையும் காணலாம்.

நம்மாழ்வாரின் திருவடி நிலைகள், "இராமானுசன்" என்றே அழைக்கபடுகிறது. இப்படி அழைப்பதன் காரணம் என்ன? ஒவ்வொரு ஆச்சார்யரின் அவதாரத்திற்கும் ஒரு விசேஷ/முக்கிய  காரணம் இருக்கும். பெரிய ஆச்சான் பிள்ளையின் திரு அவதார நோக்கம் 4000 திவ்ய பிரபந்தங்களுக்கும் வியாக்யானம் செய்வதே ஆகும். பட்டரின் திரு அவதார நோக்கம் ஸ்ரீரெங்கத்தின் ஏற்றத்தை நிலைநிறுத்துவதே ஆகும். எம்பெருமானாரின் திரு அவதார நோக்கமோ, ஸ்ரீ வைஷ்ணவ சித்தாந்தத்தையும் கொள்கைகளையும் நன்கு நிலை நிறுத்தி பரவச் செய்வதே ஆகும். எம்பெருமானார் எந்த துணை கொண்டு இதைச் செய்தார் எனில், திருவாய்மொழியினைக் கொண்டே என அனைவரும் ஒரு மிடறாக கூறுவர்கள். அதனாலயே அவருக்கு நம்மாழ்வார் மீது விசேஷ ப்ராவண்யம் ஆயிற்று. திருவாய்மொழியினையும் நம்மாழ்வாரின் பெருமைகளையும் பரவச் செய்தார். எனவே தான் அவர் "மாறன் அடிபணிந்து உய்ந்தவர்" என கொண்டாடப்படுகிறார்.

யதீந்த்ரரும் யதீந்திர ப்ரவணரும் 

நிற்க. இப்போது பெரிய ஜீயரை பற்றி பார்க்கலாம். மணவாள மாமுனிகளின் திரு அவதார நோக்கமானது எம்பெருமானரை போற்றுவதே ஆகும். மற்றும் அவரது பெருமைகளை உலகோர்க்கு பறை சாற்றி, எம்பெருமானாரே நமக்கெல்லாம் ப்ராப்ய பிராபக பூதராய் விளங்குகிறார் என்பதையும் நன்கு விளங்கச்செய்வதே ஸ்வாமி மணவாள மாமுனிகளின் திரு அவதாரத்தின் சீரிய நோக்கம் ஆகும்.  
 1. ஸ்வாமி திருவவதாரம் செய்தது ஆழ்வார் திருநகரியிலே. உடையவருக்கு பிராண பூதரான நம்மாழ்வார் அவதரித்த இடம் என்பதினாலும்,
 2. சடகோப தாசர் என்னும் ஸ்ரீசைலரான திருவாய்மொழி பிள்ளையை ஆச்ரயிப்பதாலும்,
 3. ஸ்வாமி திருவாய்மொழிப் பிள்ளையை ஆச்ரையித்திருந்த காலத்தே, பவிஷ்யதாசார்யன் சந்நிதியிலே உடையவருக்கு நித்ய திருவாராதனாதிகள் நடத்தினார் என்பதாலும், 
 4. ரகஸ்யத்ரயத்தினாலும் அறுதியிடப்படும் பொருள் ஆசார்யனே (ஆசார்யன்/தேசிகன் என்னும் சப்தம் நமது சம்பிரதாயத்தில் உடையவரையே பற்றி இருக்கும்) என்பதை விளக்கும் பொருட்டு 20 ச்லோகங்களினால் யதிராஜ விம்சதி அருளியது!! (ரகச்யங்களினுடைய பத எண்ணிக்கை 20- திருமந்தரம் - 3; த்வயம் - 6 சரம ஸ்லோகம் - 11)
 5. ஆர்த்தி பிரபந்தம் எனும் அற்புத கிரந்தம் அருளிச்செய்து ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகம் எம்பெருமானார் திருவடி நிலைகளே என நிலை நாட்டியது, (ஒரே ஒரு பாசுரம் அனுபவிப்போம்). வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் - வாழி என வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை.
 6. எம்பெருமானார் நியமனமான 74 சிம்மாசனாதிபதிகள் குறிக்கும் பொருட்டு 74 வெண்பாக்களால் உபதேச ரத்தினமாலை அருளியது, (ஸ்வாமியின் இந்த சங்கல்பம் தெரிந்து இதில் ஸ்வாமியின் பிரச்தாவம் இல்லாது இருக்க கூடாது என விரும்பிய எறும்பி அப்பா, நம்பெருமாளை 73 வெண்பாக்களுடன் இந்த பிரபந்தம் முடியும் படி பிரார்த்தித்து, 74 வது பாசுரமாக மன்னுயிர்காள்  இங்கே.... சேர்த்தருளினார்),
 7. ஸ்வாமி தனது ஆர்த்தி பிரபந்தத்தில், ஸ்ரீரெங்கத்தில் எழுந்தருளியிருக்கும் உடையவர் திருமேனியின் மீது தமது ஆதராதிசதியத்தை வெளியிட்டருளியது
ஆகியவை கொண்டு இவர்த்தம் அறுதியிடலாம்.


இவை எல்லாம் தாண்டி, ஸ்ரீரங்கத்திலும், ஆழ்வார் திருநகரியிலும் ஸ்வாமியின் திருமேனியை சேவிக்கும் கால், ஒரு விஷேஷ பரமானந்தம் ஏற்படுகின்றது. இவ்விரு திவ்ய தேசங்களிலும், ஸ்வாமி உற்சவ காலங்களில் வாஹன புறப்பாடு கண்டருளுவது இல்லை, மற்றும் திருஅத்யயன உற்சவத்திற்கு எழுந்து அருளுவதும் இல்லை (ஆழ்வார் திருநகரியில் ஸ்வாமி சாற்றுமுறை அன்று மட்டும் எழுந்தருளுகிறார்). இவ்விரு திவ்ய தேசங்களிலும் அனைத்து பெருமைகளும் நம்மாழ்வாருக்கும், உடையவருக்குமே  உண்டாகவேண்டும் என ஸ்வாமி தமது திருமேனியை வாமனன் போல் சுருக்கி கொண்டார்!

ஆகையால் அன்றோ, எம்பார், பட்டர், வடுக நம்பி, நம்பிள்ளை என பல மகாசார்யர்கள் இருந்தும், மணவாள மாமுனிகள் "யதீந்திர ப்ரவணம் வந்தே"  என  நம்பெருமாளால் கொண்டாடப் பட்டார். அதனால் அன்றோ நம்பெருமாள் இவருக்கு ஆச்சார்ய ஸ்தானத்தையும் கொடுத்து, ஆதி சேஷ பர்யங்கத்தையும் கொடுத்தான்! இது என்றோ நடந்தது என்னாதே, இற்றைக்கும் ஸ்வாமியின் திருஅத்யயனனத்தை, சிஷ்யனான தான் நடத்தி வருகிறான்! (மேலும் அறிந்து கொள்ள http://kaarimaaran.com/thiruadhyayanam.html)மணவாள மாமுனிகள் - ஸ்ரீபெரும்பூதூரில் சேவை சாதிக்கிறபடி 

இன்னும், ஆழ்வார் அடியார் அடியார் அடியார் தம் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடிகளே என 7வது திருவடி சம்பந்தத்தை விசேஷித்து கொண்டாடியுள்ளார்.

இப்பொழுது கண்ணபிரான் திருவடியான சடகோபரிடம் இருந்து 
 1. மதுரகவிகள் 
 2. நாதமுனிகள் 
 3. உய்யக்கொண்டார் 
 4. மணக்கால் நம்பி 
 5. ஆளவந்தார் 
 6. பெரிய நம்பி 
 7. உடையவர் 
என உடையவர் 7வது சம்பந்தத்தால் ஏற்றம் பெற்று மாறன் அடி பணிந்து உய்ந்தவர் ஆனாப் போலே, இராமானுசன் தாளான 
 1. எம்பார்  
 2. பட்டர் 
 3. நஞ்சீயர் 
 4. நம்பிள்ளை 
 5. வடக்கு திருவீதி பிள்ளை/ பிள்ளை லோகாச்சாரியர் 
 6. திருவாய்மொழி பிள்ளை 
 7. மணவாள மாமுனிகள் 
இந்த விசேஷ சம்பந்தம் இருப்பதினால் தான், நமது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயதவர்கள் அனைவரும் "இராமானுச தாசன்" என சொல்லி கொண்டாலும், மணவாள மாமுனிகள் ஒருவர் மட்டுமே யதீந்திர ப்ரவணர் என போற்றப்படுகிறார்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் - காஞ்சிபுரம் 

இந்த சம்பந்தத்தை வரவரமுநி தமது ஆர்த்தி பிரபந்தத்தில் சூசகமாக உணர்த்தயுள்ளார். அந்த செய்யுள் பின்வருமாறு.

பூமகள்கோன் தென்னரங்கர் பூங்கழற்கு பாதுகமாய்த் 
தாம் மகிழும் செல்வச் சடகோபர் - தேமலர்த்தாட்கே 
எய்ந்து இனிய பாதுகமாம் எந்தை இராமானுசனை 
வாய்ந்து எனது நெஞ்சமே வாழ்  

இதையே நாம் அனைவரும் உய்யும் பொருட்டு பிள்ளை உறங்காவில்லி தாசர் இயல் சாற்று முதல் பிரபந்தத்தில், 

நன்றும் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும் 
ஒன்றும் குறையில்லை ஓதினோம் - குன்றமெடுத்தான்  
அடிசேர் இராமானுசன் தாள் பிடித்தார் 
பிடித்தாரை பற்றி.

என பிரசாதிதருளியுள்ளார்.

ஓதினோம் - என்ன ஓதினோம்?

ஒன்றும் குறை இல்லை ஓதினோம் - யாருக்கு? 

இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரை (ஸ்ரீ மணவாள மாமுனிகளை) பற்றியவர்களுக்கு  - அந்த இராமானுசன் எப்படி பட்டவர் எனில் 

குன்றம் எடுத்தான் அடி சேர் -  கண்ணன் எம்பெருமானின் திருவடிகளை பற்றியவரான மாறன் அடிபணிந்து உய்ந்தவர் 

குன்றமெடுத்தான் அடி சேர் இராமானுசன் தாள் பிடித்தார் பிடித்தாரை பற்றியவர்களுக்கு - ஒன்றும் குறை இல்லை ஓதினோம்!

ஆக, இப்படி கண்ணன் கழல்களான நம்மாழ்வார், அவர் திருவடி நிலைகளான பகவத் இராமானுஜர், அவர் திருவடி நிலைகளாக விளங்குகின்ற மணவாள மாமுனிகளை அடைந்தவர்களுக்கு, உறு துயர் அடையாவே!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஆதாரம் - ஸ்ரீ வைஷ்ணவ சமய ஆசார நிஷ்கர்ஷம், ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர்.


அனுபந்தம் - 1

ஸ்ரீ ஸூக்தி ரத்னாகரம் - ஸ்ரீமதுபயவே. இளையவில்லி. சடகோபாச்சாரியார் ஸ்வாமி ஸ்ரீமுகத்தில் இருந்து தொகுத்தது மூலம் - ஸ்வாமி உபய வேதாந்த மஹா வித்வான் காஞ்சி பிர.ப ஸ்வாமியின் தன் சரிதை சுருக்கம் No comments:

Post a Comment