Wednesday, October 17, 2012

ஈடுமுப்பத்தாறாயிரப்படி பெருக்கர்

 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

ஈடு முப்பத்தாறாயிரப்படியும் ஸ்வாமியின் 

திவ்யசூக்திகளும் 


ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர், யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில், ஸ்ரீ மணவாள மாமுனிகளை பற்றி குறிப்பிடும் பொழுது "ஈடு முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்"  என அடைமொழி இட்டு அழைக்கிறார். 

ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளி பெரிய பெருமாளை மங்களாசாசனம் செய்வதற்கு செல்லும் முன்பு நடந்தவைகளாக யதீந்திர ப்ரவண ப்ரபாவத்தில் இருந்து அறியப்படுபவை - "அக்காலத்திலே கோயிலதிபதியாய் இருந்த திருமாலை தந்த பெருமாள் பட்டருடைய அனுமதிக்காக அவர் திருமாளிகையிலே எழுந்தருள, அவரும் அப்ப்யுத்தான பிரணாமாதிகள் தொடக்கமான உபசாரங்களை பண்ணி ஆசனத்திலே எழுந்தருளிவைத்து "தேவரீரை சேவிக்கப் பெற்றோமே"" என்று பெரிய ப்ரீதியோடே ஆதரித்து "திருவாய்மொழி ஒரு பாட்டுக்கு அர்த்தம் அருளிச் செய்ய வேணும்" என்ன, நாயனாரும் ஆழ்வாருடைய வைபவத்தை இதிஹ்யமாக பாட்டை எடுத்து உபன்யசித்தருள பட்டரும் போர வித்தராய் , "இவர் ஈடு முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்" என்று மிகவும் உபலாளித்து .....""

மேலும் ஜீயர் கிடாம்பி நாயனார் பக்கலிலே ஸ்ரீ பாஷ்யம் அதிகரிக்க எழுந்து அருளியதை விவரிக்குமிடத்து, "இப்படி ஜீயர் உருத்தொரும் ஈடு முப்பத்தாறாயிரப்படியை சொல்லிக் கொண்டு போகிறதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, ஒருவரும் அறியாமல் ஏகாந்தத்திலே சென்று "முப்பத்தாறாயிரப்படி பெருக்கர்" என்று உமக்கு திருநாமம் சாத்தினது வெறுமனன்று ....."

என பொறித்து வைத்துள்ளார். ஸ்வாமி மணவாள மாமுனிகள் தமது ஆசார்யரிடம் செய்த பிரதிஞ்ஞை காரணமாக திருவாய்மொழியின்  மீதும்  ஈட்டின் மீதும்  இத்தகைய அசாதாரணமான பக்தி கொண்டிருந்தார் என்னில், அவரது ஸ்ரீ ஸூக்திகளில்  இது நன்கு புலப்பட்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு ஒரு ஸ்ரீ சூக்தியினை அனுபவிப்போம். பெரிய ஜீயருடைய திருவாய்மொழி நூற்றந்தாதி அனைவரும் அறிந்ததே ஆகும். ஒவ்வொரு திருவாய்மொழி பதிகத்திற்கும் சுருக்காக ஒரு பாட்டினை அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ மணவாள மாமுனிகள் - ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐப்பசி திருமூலம் மங்களாசாசன சமயத்தில் 

இதில் வைகல் பூங்கழிவாய் பதிகத்தினை எடுத்துக் கொள்வோம். ஆழ்வார் இங்கு தூது விடும் பதிகம் ஆகும். இதற்க்கான திருவாய்மொழி நூற்றந்தாதி 

"வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என் 
செய்கைதனை புள்ளினங்காள் செப்புமென - கைகழிந்த 
காதலுடன் தூது விடும் காரிமாறன் கழலே 
மேதினியீர் நீர் வணங்குமின்"

இங்கு இராமன் என்பது உயிரான வார்த்தை ஆகும். திருவண்வண்டூரில் சேவை சாதிக்கும் பெருமான் இராமபிரான் அல்லவே! இங்கு இராமபிரானைக் குறித்து தூது விடுவது பொருந்துமோ என்னில்,

ஈட்டில் இந்த திருவாய்மொழி பதிகத்திற்கு தூது விஷயம் இராமபிரான் (விபவம்) என நிர்ணயிக்கப் பட்டு உள்ளது . ஆழ்வாரும், இந்த பதிகத்தில் "மாறில் போரரக்கன் மதிள் நீறெழ செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு  " என்றோ தெரிவித்துள்ளார். இதற்க்கு வியாக்யானம் செய்த ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயரும்,  "இரண்டாம் தூதுக்கு விஷயம் விபவமிறே" என்றோ வ்யாக்யானித்துள்ளர்!

ஈட்டின் அர்த்த விசேஷங்கள் ஸ்வாமியின் திருஉள்ளத்தில் அலை எடுத்ததாலன்றோ இத்தகைய ஸ்ரீ சூக்தி வெளிப்பட்டது! "முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் - பின்னோர்ந்து தாம் அதனை பேசுவதற்கு" இது ஒரு சிறிய உதாரணம்.

குறிப்பு: ஈட்டில் மட்டும்  அன்றி அதற்க்கு சேமக் காப்பான ஆச்சர்ய ஹ்ருதயத்திலும் இது அற்புதமாக விளக்கப்பட்டு  உள்ளது. இது தனியே அனுபவிக்க வேண்டியதாகும். 

இன்னும் ஒன்று அனுபவிக்கலாம்.

ஆழ்வார் 10-ம் பத்தில், வேய்மருதோளினையில், ஆய்ச்சியர் பாவனையில் பாடிய பதிகத்திற்கு, திருவாய்மொழி நூற்றந்தாதிப் பாசுரம்,

"வேய்மருதோ ளிந்திரைகோன் மேவுகின்ற தேசத்தை 
தான்மருவாத் தன்மையினால்* தன்னைஇன்னம் - பூமியிலே 
வைக்குமென சிந்தித்து மால்தெளிவிக்கத் தெளிந்த 
தக்கபுகழ் மாறனெங்கள் சார்வு "

இங்கு ஆய்ச்சிகளை பற்றிய ப்ரஸ்தாவமோ, குறிப்போ ஈஷத்தும் கிடையாது. இதுவும் ஈட்டை அடியொற்றியே சாதித்ததாகும். இங்கு ஈடு முப்பத்தாறாயிரப்படி அவதாரிகை - "அநாதியாய் வருகிற அசித்சம்சர்கத்தை அனுசந்தித்து அஞ்சின அத்தாலும், ஈஸ்வர ஸ்வாதந்தரியத்தை அனுசந்தித்து அஞ்சின படியாலும் - அதாவது சிசுபாலனுக்கு தன்னைக் கொடுத்து ஸ்ரீ பரதாழ்வானுக்கு மறுத்து போன ஸ்வாதந்தரியமிறே......"

இன்னும் இப்பாசுரத்திலயே "மால்தெளிவிக்கத் தெளிந்த" என்பது தனியே அனுபவிக்க வேண்டியது.

இவை சில துணுக்குகளே யாகும். இது போன்று அனுபவிக்க வேண்டியது மிக உள!

அழகிய மணவாள பெருமாள் நாயனார், நம்மாழ்வார் திருவாய்மொழியினை வெளியிட்டருளியதை  குறிக்குமிடத்து, "நீர் பால் நெய் அமுதாய் நிரம்பின ஏரி நெளிக்குமா போலே" என அருளியுள்ளார். (ஏரியில் நீர் நிரம்பினால் தன்னடையே மதகுகள் வழியே வெளியேறுமா போலே, ஆழ்வார் திருஉள்ளத்தில் தேங்கி உள்ள பகவத் அனுபவமாவது திருவாய்மொழியாக வெளிப்பட்டது!). இதே போன்று ஸ்வாமியின் ஈடு அனுபவமே திருவாய்மொழி நூற்றந்தாதியாக வெளிப்பட்டது!

இதைக் கருத்தில் கொண்டு அன்றோ, இவ்வருளிச் செயலுக்கு தனியனிட்ட ஆச்சார்யர்களும் "சொல்லும் பொருளும் தொகுத்துரைத்தான்" என உரைத்தனர்!ஆனது பற்றியே இது "அல்லும் பகலும்" அனுபவிக்க வேண்டியதாயிற்று! (திருவாய்மொழி நூற்றந்தாதி பெருமை பற்றிய ஆங்கில கட்டுரைக்கு இந்த இடுகைக்கு செல்லவும்; http://sriramanujadarisanam.blogspot.in/2012/10/thiruvaimozhi-nootrandhadhi-perumai.html).

ஈடு முப்பத்தாறாயிரப்படியினை ஸ்வாமி வளர்த்த விதம் 

ஸ்வாமியிடம் ஈடு வந்தடைந்த விதம் ஓராண் வழியாய் ஆயிற்று. நம்பிள்ளை, ஸ்வாமியின் திருவவதாரத்தை பெரிய பெருமாளால்   உணர்த்தப்பட்ட பின், அதை ஓராண் வழியாய் நடத்தும் படியும் தக்க சமயத்தில் ஈடானது பிரசாரத்திற்கு வரும் எனவும் நியமித்தருளினார். ஈடு என்கிற மஹா க்ரந்தமானது அவருடைய நியமனப்படியே ஸ்வாமியிடம் வந்து தங்கிற்று.

ஸ்வாமி மணவாள மாமுனிகள் - திருவல்லிக்கேணி 
ஸ்வாமி அதனைக் கீழ்க்கண்டவாறு வளர்த்தருளினார்.
 1. பல பிரதிகள் ஏட்டில் அருளுவது.
 2. ஈட்டிற்கு பிரமாணத் திரட்டு அருளிச் செய்தது.
 3. ஈடு அர்த்தமாகும்படி கூட்டி  பிரதிகள் ஏறி அருள நியமித்தருளியது.
 4. ஈட்டிற்கு அரும்பதம் எழுதும் படி நியமித்தருளியது
 5. ஈடு சிம்மாசனத்தில் கந்தாடை அண்ணனை அபிஷேகித்தருளியது.
 6. நம்பெருமாளுக்கே ஈடு உபன்யசித்தது
ஸ்வாமிக்கு ஈட்டின் மீது உள்ள இத்தகைய அசாத்ய உற்றத்தை பற்றியே, ஸ்வாமிக்கு உபய பாஷா ப்ராவண்யம் இருக்கச் செய்தேயும், "வாழி அவன் மாறன் திருவாய்மொழிப்பொருளை மாநிலத்தோர் தேறும்படி உரைக்கும் சீர்" என வாழி திருநாமம் ஏற்பட்டுள்ளது.


"சேற்றுக்கமலவயல்சூழரங்கர் தம் சீர் தழைப்ப 
போற்றித்தொழும் நல்லஅந்தணர் வாழவிப் பூதலத்தே 
மாற்றற்ற செம்பொன் மணவாளமாமுனி வந்திலனேல் 
ஆற்றில்கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே "

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ 
சடகோபன் தண்தமிழ் நூல் வாழ - கடல்சூழ்ந்த 
மனனுலகம் வாழ மணவாளமாமுனியே !
இன்னுமொரு நூற்றாண்டிரும்.


2 comments:

 1. வேய் மரு தோள் இந்திரை கோன் என்ற திருவாய்மொழியி நூற்றந்தாதியில் ஆய்ச்சியர் பற்றிய ப்ரஸ்தாவமோ, அல்லது, எம்பெருமான் திருவுள்ளத்துக்குச் அனுகுணமாக இருக்க வேணும்.
  உந்தன் திருவுள்ளம் இடர் கெடும் தொறும் என்பது பாசுரம்.

  ஆயினும், ஈண்டு, இதைப் பற்றி மாமுனிகள் பேசவே இல்லை.

  ஸுதர்ஸன் ஸ்வாமி குறிப்பிட்டது போல், ஈட்டு அவதாரிகையை அடியொற்றிருக்கிறார். மாமுனிகள்.

  மேலெழ நோக்குங்கால், மாமுனிகள் , இத்திருவாய்மொழியின் மையக் கருத்தை எடுக்கவில்லையோ என்று தோன்றும்.

  ஈட்டின் அவதாரிகை காணும்கால், இக்கலக்கம் தெளியும்.

  நனறி.

  தாசன்.

  வானமாமலை பத்மனாபன்

  ReplyDelete
 2. Thank you Swamy for explaining in detail,

  dasan,
  sutharsan

  ReplyDelete