Showing posts with label Guruparamparai. Show all posts
Showing posts with label Guruparamparai. Show all posts

Thursday, January 31, 2013

பிராட்டியும் ஆழ்வானும்


 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

பிராட்டியும் ஆழ்வானும் 

வரதார்ய குரோ: புத்ரம் தத்பதாப்ஜைக தாரகம்

ஜ்ஞாநபக்த்யாதி ஜலதிம் வந்தே ஸுந்தர தேசிகம்

கண்ணின்சிறுத்தாம்பு வ்யாக்யானத்தில், பெரிய ஆச்சான் பிள்ளை நன்மையால் மிக்க நான்மறையாளர்கள் என்கிற சந்தைக்கு வ்யாக்யானமிடும் பொழுது பிராட்டியையும் ஆழ்வானையும் போலே என்று அருளியுள்ளார். இப்போது நாம் இந்தக் கட்டுரையில் இருவரையும் ஒப்பிட்டு இருவரது திருக்குணங்களையும் பேசி மகிழலாம் - முக்கியமாக ஆழ்வானுடைய திருக்குணங்களை அனுபவிக்கலாம்.

ஆழ்வான் - பிராட்டி திருக்கோலத்தில் 
இந்தத் தேஹம் அழிந்தால் ஆத்மாவிற்கு பிராட்டிமார்களுடன் ஒப்புமை உண்டு என்பது ஸ்ரீவசனபூஷண திவ்யஸாஸ்த்ரத்தால் அறியப்படுவது. "கந்தல் கிழிந்தால் ஸர்வருக்கும் நாரீணாமுத்தமையுடைய அவஸ்தை வரக்கடவதாய் இருக்கும்" என்று 239 சூர்ணிகை. மேலும் ஆச்சார்ய ஹ்ருதயத்திலும் இவ்வர்த்தம், "வித்யை தாயாகப் பெற்று" என்கிற சூர்ணிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரனை ஆச்ரயிக்கும் பொழுது பெரிய பிராட்டியாரை புருஷகாரமாகக் கொண்டே ஆச்ரயிப்பது போலே இராமானுஜரை பற்றும் பொழுது ஆழ்வானை புருஷகாரமாகக் கொண்டே சரண் புகுவர் பூர்வர்கள். இதனை "மொழியை கடக்கும்" என்னும் இராமனுச நூற்றந்தாதிப் பாசுரம் கொண்டும் "ஸ்ரீவத்ஸசிஹ்ந சரணம் யதிராஜமீடே", "கூராதிநாத குருகேச முகாத்ய பும்சாம் ..." என்னும் யதிராஜ விம்சதி ஸ்லோகங்களை கொண்டு அறுதியிடலாம்.  (உடையவரைக் கொண்டாடுமிடத்தில் அவரை கூரத்தாழ்வானுக்கு ஸ்வாமி என்னுதல்)

பெரிய பிராட்டியார் புருஷகாரமாவதற்கு அவருடைய, 
  • க்ருபை, 
  • பாரதந்த்ரியம், 
  • அநந்யார்ஹத்வம் 
என்னும் மூன்று உயர்ந்த திருக்குணங்களே (அவரது ஸ்வாமியான பெருமாளைக் குறித்து) காரணம் என்பது ஸ்ரீவசனபூஷணம் சூர்ணிகை - 6 கொண்டு தெளிவது. புருஷகாரமாவது ரக்ஷிக்கமாட்டேன் என்று சொல்லும் ஈஸ்வரனை மாற்றி குற்றம் புரிந்தவனையும் ஏற்றுக் கொள்ள வைப்பது. அப்படி ஒருவர் கூறுவதை தன் காரியமாக நடத்தவேண்டும் என்றால் சிபாரிசு (புருஷகாரம்) செய்பவர் ஈஸ்வரனுக்கே அடிமைப்பட்டு இருக்க வேண்டும், அவன் வைத்த படி இருக்க வேண்டும் - அவனைத் தவிர வேறு எதையும் நாடாதவராக இருக்க வேண்டும். இவை இருந்த போதிலும் துன்பப்படுபவர்கள் பக்கல் இரக்கம் கொள்ள வேண்டும் 

இனி இவை மூன்றும் ஆழ்வானுக்கு அவரது ஆச்சார்யரான இராமானுசரை குறித்து இருப்பது காணலாம்.

க்ருபை

க்ருபையாவது பிறர் நோவு கண்டால் அவர்களிடம் இரக்கம் கொள்வது. பிறர் மீது இரக்கம் கொண்டால்தான், அவர்களை சிபாரிசு செய்வதற்கு திருஉள்ளம் இறங்கும் - இதுவே புருஷகாரத்திற்கு வேண்டுவது. இனி ஆழ்வானுக்கு இத்தகைய கிருபை இருப்பது கீழ்க்கண்ட நிகழ்வுகளில் இருந்து நிரூபணம்.


  1. ஒரு தடவை ஆழ்வான் , பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையின் த்வநி கேட்டு மூர்ச்சித்து கீழே விழுந்தார்!!! 
  2. ஒரு குழந்தை பிறந்த செய்தி அறிந்து நம்பெருமாளிடம் சென்று ஒரு ஜீவன் சம்சாரத்தில் பிறந்து அவஸ்தை படுகிறதே என்று முறையிட்டார்.
  3. தனது நடத்தையினால் தான் இராமனுசர் மேல்நாடு செல்லும் படியும் ஆழ்வான் தமது திருக்கண்களை இழக்கும்படி நேர்ந்தமையும் பெரிய நம்பி இவ்விபூதி விட்டு பரமபதம் செல்லும்படியும் நேர்ந்தது என வருந்திய நாலூரான் பொருட்டு ஈஸ்வரன் தண்டிப்பன் என்றஞ்சி, "நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேண்டும்" என்று ஈஸ்வரனிடம் முறையிட்டுக் கொண்டார். (இது கீழில் விரிவாகக் காண்க)

பாரதந்த்ரியம்

பாரதந்த்ரியமாவது அதீனப்பட்டிருப்பது (உடையவருக்கு) - இது எங்கு நிரூபணம் என்னில்.
  1. உடையவர்  திருவரங்கதமுதனார் திருமாளிகைக்கு ஏஹாக்ரஹத்திற்கு புஜிக்கும்படி நியமித்த அளவிலே, ஆழ்வான் மறுவார்த்தை பேசாதே செல்லுதல் 
  2. திருவரங்கச்செல்வனார் சந்நிதி சாவியை உடையவர் திருவடிகளில் சமர்ப்பித்தல் 
  3. உடையவர் திருவீதி பிரதக்ஷிணத்திற்காக பெரிய நம்பி பின்னே செல்லும்படி நியமிக்குமிடத்து, அவர் பின்னே செல்லுதல் 
  4. உடையவர் சரம ஸ்லோகத்தின் விசேஷ அர்த்தத்தை அருளும் பொருட்டு ஒரு மாசம் உபவாசம் நியமிக்கும் பொழுது ஆசார்யன் திருமாளிகை திருவாசலிலே உபவாசம் இருத்தல்  
  5. பரமபதம் செல்லும் பொழுதும் உடையவருக்கு பின்பு சென்றால் அவத்த்யம் விளையுமே என்று, அவருக்கு முன்பு செல்லுதல் (புதிதாக வரும் அடியவருக்கு பரமபதத்தில் இருக்கும் நித்ய முக்தர்கள் திருவடி விளக்குவார்கள்)  
 ஆகியவை கொண்டு நிரூபிக்கலாம்.

அநந்யார்ஹத்வம் 

அநந்யார்ஹத்வமாவது -  அவருக்கே அற்றுத் தீர்ந்தமை; அவரை (உடையவரை) ஒழிய வேறொன்றிலும் செல்லாமை. இக்குணம்

  1. எம்பெருமானார் திருவரங்கம் பெரிய கோவில் விட்டு திருநாராயணபுரம் எழுந்தருளின  பின்பு, ஆழ்வான் திருவரங்கம் நம்பெருமாளை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளும் பொருட்டு ராஜ்ய சேவகர்கள் அவரைத் தடுக்க, அவர்களில் ஒருவன் அவரை தடுக்காதீர்கள் என்று விவாதிக்க - ஆழ்வான் என்ன என்று கேட்கும் பொழுது, உடையவரும் சம்பந்தம் உடையவர்களை உள் புக விடக்கூடாது என்று ஆணை - ஆனால் நீர் ஆத்ம குணங்கள் நிறைந்தவர் உம்மை உள்ளே விடுகிறோம் என்று விடை கூறினார்கள்.இது கேட்டு ஆழ்வான், " ஐயோ ஆத்ம குணங்கள் இருந்தால் அது ஆசார்யனைக் கிட்டுவதற்கு  உபயோகப்படும் - நமக்கு அதுவே அவரது சம்பந்த்தத்தை இழப்பதற்கு வழி கொடுக்கிறதே" என்று வருந்தி உடையவர் இல்லாமல் பெருமாள் சேவிக்க வேண்டாம் என்று திரும்பினார் 
  2. எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யம் சாதிக்கச்செய்தே, ஆழ்வானைச் சீறி வெளியேற்ற, அதற்க்கு ஆழ்வான் "இவ்வாத்மா உடையவருக்கு சேஷம்; அவரிஷ்டம் போல் அதை பயன்படுத்தலாம்" என்று அருளிச்செய்தார்.
 என்னுமிடத்தில் காணாலாம்.

சிறையிருந்தவள் ஏற்றம் சொல்லிய ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டியின் பெருங்குணமாக வெளியிட்டிருப்பது, பிராட்டி தன்னை நலிந்த ராக்ஷஷிகளையும் திருவடியிடம் இருந்து ரக்ஷித்தது என்பதேயாம். இத்தகைய பெருங்கருணையும் தாயாள குணமும் கொண்ட ஆச்சார்யர் ஸ்ரீ கூரத்தாழ்வான் என்று சொல்லலாம்.


ஆகையால் அன்றோ தான் திருக்கண்கள் இழக்கக் காரணமாய் இருந்த நாலூரனுக்காக அஞ்சி, பெருமாள் சீறியருள்வரே என்று மிகவும் திருஉள்ளம் இறங்கி, கச்சி வரம் தரும் பெருமாள் தமக்கு வீடு பேறு அருளியவுடன், அப்பேறு நாலூரனுக்கும் அருள வேண்டும் என வேண்டினார். என்னே ஒரு திருக்குணம்!!!

ஸ்ரீமத் கூரகுலாதீசம் ஸ்ரீவத்சாங்க முபாஸ்மஹே |
அக்ர்யம் யதீந்திரசிஷ்யாணாம் ஆத்யம் வேதாந்த வேதிநாம் ||

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்சமுக்குறும்பாம் 
குழியை கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின் 
பழியை கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா 
வழியைக்  கடத்தல்  எனக்கு இனி யாதும் வருத்தமன்றே.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 

ஆதாரம் - இராமானுஜ ரஹஸ்யத்ரயம், 6000 படி குருபரம்பரா பிரபாவம்