Sunday, August 3, 2014

ரஹஸ்யத்ரயம்

 ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:


திருமாமகள் கேள்வனானய், ஸ்ரீ வைகுண்டாதிபதியான ஸர்வேஸ்வரன், ஸ்ரீ வைகுண்டத்திலே, நித்ய முக்தர்களுக்கு [நித்யர் - ஸம்ஸாரமாகிற  லீலா விபூதியிலே ஒரு நாளும் பிறவாதவர்கள், முக்தர் - ஸம்ஸாரத்தில் இருந்து அவனது திருவருளாலே விடுபட்டு மோக்ஷத்தை அடைந்தவர்கள்] பரமானந்ததை விளைவித்துக் கொண்டு, ஸேவை ஸாதிக்கிறான். இப்படி இருக்கச் செய்தே, அந்த நித்ய முக்தர்களைப் போலே, இந்நிலவுலகத்தில் வாழும் நமக்கும் அவ்வெம்பெருமானை அநுபவிக்க ப்ராப்தி (உரிமை) இருக்கச் செய்தேயும், நாம் அதை இழந்து கிடக்கும் தன்மையை நோக்கி, மிகவும் வருத்தப்பட்டு, "சாலப் பல நாள் உகந்து உயிர் காப்பான்" என்கிறபடியே சேதனர்களான ஜீவாத்மாக்களுக்கு ப்ரளய ஆபத்து வந்த போது  காப்பாற்றி, அவர்களுக்கு சரீரத்தையும், இந்த்ரியத்தையும் கொடுத்தருளினான். மேலும், சேதனர்கள் தவறான வழியில் செல்லாதபடி, நித்யமாய், ஒரு புருஷனாலே சொல்லப்படாததாய், ஸ்வத ப்ரமாணமாய் விளங்குகின்ற வேதத்தைக் கொடுத்தருளினான். வேதம் மட்டுமின்றி, அதை ப்ரகாஸப்படுத்துகிற, அதன் அர்த்ததை விளக்குகிற இதிஹாஸம், புராணம் மற்றும் ஸ்ம்ருதிகளையும் கொடுத்தருளினான். இதனையே "முனிவரை யிடுக்கியும் முந்நீர் வண்ணாயும் வெளியிட்ட சாஸ்த்ர தாத்பர்யங்கள்" என்கிறார் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். வேதத்தை தான் நேரே ப்ரம்மாவுக்கு கொடுத்தருளினது மட்டும் இன்றிக்கே, ரிஷிகளான முனிவர்கள் மூலமாக வேதத்தின் உபப்ரம்மணங்களான மற்றைய சாஸ்த்ரங்களை வெளியிட்டருளினான் *கலைகளும் வேதமும் நீதி நூலும் .... நீர்மையினால் அருள் செய்து * என்கிறபடியே.இங்கு ஒரு ஸந்தேஹம் தோன்றும். புருஷோத்தமனான எம்பெருமான், நம்மை கண்டு ஏன் இறக்கம் கொள்ள வேண்டும்? இதற்கு *உன் தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது* எனப் பாடவல்ல நாச்சியார் அருளியபடி, எம்பெருமானுக்கு ஜீவர்கள் மேல் இருக்கும் ஸ்வாமித்வமே {ஸ்ரீமந் நாராயணன் - ஸ்வாமி; ஜீவர்கள் - அவனுடைய சொத்து;ஸ்ரீமந் நாராயணன்  -சேஷி, கைங்கர்யம் ஏற்றுக் கொள்ளுபவன்,  ஜீவர்கள் - சேஷபூதர்கள், அவனுக்கு கைங்கர்யம் பண்ணுகிறவர்கள்}, இப்படி க்ருபையை பிறப்பிக்கச் செய்யும்.


ஆனாலும், அவ்வேதத்தை அதிகரித்து, அதன் வழி நடந்து, அதன் அர்த்த விஷேசங்களைப் புரிந்து கொண்டு எம்பெருமானை அடைவது மிகவும் கடினமாகையாலே, அதன் ஸாரமாகிற ரஹஸ்யத்ரயதையும் ப்ரபலப்படுத்தியருளினான்.

இந்த ரஹஸ்யத்ரயம் என்றால் என்ன? - கீழில் காட்டப்படுகின்ற மூன்றேயாகும்.


  1. திருமந்த்ரம்
  2. த்வயம்
  3. சரம ஸ்லோகம்


இம்மூன்று ரஹஸ்யங்களை யார் யாருக்குச் சொன்னது என்பது நமக்குத் தெரிந்தால், இதனுடைய ஏற்றம்/பெருமை புரியும். திருமந்த்ரத்தை, ஸ்ரீ பதரிகாச்ரமத்திலே, ஸ்ரீமந் நாராயணனா எம்பெருமான் நர-நாரணர்களாய், ஆசார்ய சிஷ்ய வடிவையெடுத்து, ப்ரகாசப்படுத்தினான். த்வயத்தை ஸ்ரீவிஷ்ணு லோகத்திலே, பிராட்டிக்கு உபதேஸித்தருளினான். சரம ஸ்லோகத்தை அர்ஜுனனுக்கு, திருத்தேர் தட்டிலே உபதேஸித்தருளினான்.ஸகல வேதத்தின் ஸாரமாகிற இந்த ரஹஸ்யத்ரயத்தையும், ஸமாச்ரயண காலத்தில்  ஆசார்யன் உபதேசித்தருளுகிறார்.  இவ்வர்த்தங்கள் இப்படி நமக்கு கிடைக்கக் காரணமானவர் ஸ்வாமி இராமானுசரே ஆகும்! பரமார்த்தமான இந்த ரஹஸ்யங்களை எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் ஒராண் வழியாய், அதாவது ஒரு ஆசார்யர் ஒரு சிஷ்யனுக்கு உபதேசிக்க, அதுவும் மிகவும் பரீக்ஷை பண்ணி பின்பே உபதேசித்து வந்தார்கள். எம்பெருமானாரையே 18 தடவை வரச்செய்து, பின்பன்றோ திருக்கோஷ்டியூர் நம்பி உப்தேசித்தருளினார்! ஆனால் எம்பெருமானாரோ ஆசையிருந்தாலே போதும் என அதை மாற்றியருளினார். அதனால் வரம்பறுத்த பெருமானார் என்றே போற்றப்படுகிறார். இதை ஸ்வாமி பிள்ளை லோகாசார்யரே விவரித்தருளுகிறார். இந்த அர்த்தத்தின் மேன்மையைப் பார்த்ததாலே, எம்பெருமானார்க்கு முன்புள்ள ஆசார்யர்கள் வரம்பு வைத்து உபதேஸித்துவந்தார்கள். ஆனால் எம்பெருமானாரோ, ஸம்ஸாரிகளின் துர்க்கதியைப் பார்த்து அந்த வரம்பை அறுத்தருளினார்.

இங்ஙனம் ஸ்வாமி மணவாள மாமுனிகளின் முமுக்ஷுப்படியின் அவதாரிகையைத் தழுவி யதாமதி விண்ணபிக்கப்பட்டது.இந்த ரஹஸ்யத்ரயத்திலுள்ள அர்த்த விஷேசங்களை எல்லாம் அடக்கி, ஸூத்ரங்களாக ஆக்கித் தந்தருளினார், லோகதேசிகனான பிள்ளை லோகாசாரியார். அதற்கு மிகவும் அழகாக, பதம் பதமாகயெடுத்து வ்யாக்யானம் அருளியுள்ளார் விசதவாக் சிகாமணியான மணவாள மாமுனிகள். இந்த க்ரந்தத்தை அவசியம் அனைவரும், ஆசார்யன் திருவடிகளில் காலக்ஷேபமாகக் கேட்டு உய்வு பெறுவோமாக.