Thursday, August 9, 2012

திருமழிசைபிரான் வைபவம்

ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:

தையில்மகமின்று தாரணியீர் * ஏற்றம் இந்தத் 
தையில்மகத்துக்குச் சாற்றுகின்றேன் - துய்யமதி 
பெற்ற மழிசைப்பிரான்பிறந்த நாளென்று *
நற்றவர்கள் கொண்டாடும் நாள்.

மகாயாம் மகரேமாஸே சக்ராம்சம் பார்கவோத்பவம் |
மஹீசாரபுராதீசம் பக்திஸாரமஹம் பஜே ||

திருமழிசையின் சிறப்பு:

நான்முகனை முன்னொரு காலத்தில் அத்ரி, வசிஷ்டர், ப்ருகு முதலான ரிஷிகள் "உலகில் தவம் இயற்றுவதற்கு உயர்ந்த இடம் எது?" என்று கேட்க, நான்முகனும் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து ஒரு துலாகோல் செய்து தரும்படி நியமித்தார். அந்த துலாக்கோலை கொண்டு பூமியின் மற்ற பகுதிகளையும், சிறந்த தலமான் திருமழிசையையும் அளக்க அத்துலாகோல் திருமழிசையே உயர்ந்த இடம் என்று காட்டி நின்றது. 

திருமழிசை ஆழ்வாரின் அவதாரம் 

இங்ஙனம் பிரமனால் தெளியப்பட்ட  ரிஷிகள், அங்கு சென்று தவம் இயற்றத் தொடங்கினர். அவர்களில் பார்க்கவர் என்பார் ஒரு முனிவர் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்து தீர்க்கசத்ரம் எனும் வேள்வியை இயற்றத் தொடங்கினார். இவரால் தனது இந்திர பதவிக்கு ஆபத்து வருமோ என்றஞ்சிய இந்திரன், இவரது தவத்தைக் கலைக்க எண்ணி ரம்பா முதலான அப்சரஸ் ஸ்திரீகளை அனுப்பி வைத்தான். அவர்களில் மிகவும் வல்லமையுடைய கனகாங்கி என்பால், இம்முநிவருடைய நிஷ்டையைக் கலைத்து அவரது நெஞ்சைப் பறித்தார். பகவத் சங்கல்பத்தால் நடந்த இந்த காரியத்தின் விளைவாக கண்காங்கிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை பிண்ட ரூபமாக இருந்த காரணத்தினால் அவள் வெறுத்து அக்குழந்தையை ஒரு புதரில் என்றிந்து சென்று விட்டாள். தவம் கலைந்ததை உணர்ந்த முனிவரும் அவ்விடம் விட்டகன்றார்.

ஸ்ரீமன் நாராயணனது அருளால் திருவாழி ஆழ்வானின் அம்சமாகப் பிறந்த அக்குழந்தை  ஒரு ஆண் குழந்தையாக உருபெற்று வளரத் தொடங்கியது. இந்த குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பிரம்பறுக்கும் திருவாளன் என்பான் குழந்தையை எடுத்து வளர்க்க தொடங்கினான். இக்குழந்தையும் உலக இயற்கைக்கு மாறாக பசி தாகங்கள் அல்லாது கண்ணனையே நினைத்து வளரத் தொடங்கியது. இவரது பிரபாவத்தை உணர்ந்த ஒரு தம்பதியர் இவருக்கு நிச்சலும் பாலமுது காய்ச்சிக்கு கொடுத்து வந்தனர். பிள்ளை பேறு இல்லாத குறை அவர்களுக்கு இருக்கக் கண்ட ஆழ்வார் ஒரு நாள் தம் அமுது செய்தருளிய பாலின் மீதியை இவர்களுக்கு பருகக் கொடுக்க, இவர்களும் அப்ப்ரசாதத்தை உண்டதின் பலனாக ஒரு குழந்தை பெற்றனர். "கணிகண்ணன்" என்று பெயரிடப்பட்ட அக்குழந்தையும் ஆழ்வாரிடம் மிகவும் ஈடுபாட்டுடன் வளரத் தொடங்கியது.

பேயாழ்வார் திருத்திப் பணிகொண்டது 

பின்பு பார்க்கவ குமாரர் பரம்பொருள் ஆராய்ச்சி செய்யத் தொடங்கி சாகியம் சமணம், பௌத்தம் முதலானவைகளை ஆராய்ந்து அவற்றில் உள்ள குறைபாடுகளினால் சைவ சமயத்தை ஆராய்ந்து கொண்டு இருந்தார். இங்ஙனம் இருக்கும் பொழுது பேயாழ்வார் இவரைத் திருத்திப் பணி கொள்ள எண்ணி, இவர் முன்பே ஒரு செடியை தலைகீழாக நட்டு, ஓட்டை வாளியினால் , அருந்த தாம்பு கொண்டு கிணறில் இருந்து நீர் வார்க்கலானார். இச் செயலைக் கண்ட திருமழிசை ஆழ்வாரும், "நீர் பித்தரோ" என வினவ; நாம் பித்தர் என்றால் நீர் பெரும் பித்தர் அன்றோ என பதிலுரைத்தார். மேலும் வேதங்கள் எல்லாம் ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள் என்று ஒரு சேர கோஷிக்கும் பொது, நீர் சிவனை பற்றி நிற்பதால் நீர் பெரும் பித்தர் ஆகிறீர் என்று உரைத்தார்.  என்று தலை கீழாக நட்ட இந்த செடி, ஓட்டை வாளியினாலும், அறுந்த தாம்பினாலும் வளர்கிறதோ அன்றன்றோ சிவனைப் பற்றிய நீர் மோக்ஷமடையலாம் என உரைக்க, அது கேட்ட திருமழிசை ஆழ்வாரும் அன்று முதல் திருமாலுக்கு தொண்டு பூண்டார்.

பக்திசாரர் 

இங்ஙனம் திருத்திப் பணிகொள்ளப்பட்ட ஆழ்வார், திருமழிசைக்கு சென்று அங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ஜகன்னாதப் பெருமாளை மங்களாசாசனம் செய்து கொண்டு இருந்தார். ஒருநாள் சிவனும் பார்வதியும் ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருக்க, இவரது தேஜஸினைக் கண்ட பார்வதி இவரைப் பற்றி அறிந்து கொண்டு, இவருக்கு வரம் கொடுக்குமாறு சிவனைத் தூண்டினாள். சிவனும் இவர் முன்பு வந்து நிற்க; ஆழ்வார் உதாசீனராய் இருந்தார். இது கண்ட சிவனும் ஆழ்வாரை  நோக்கி இப்படி இருக்க காரணம் என் என்று வினவ ஆழ்வாரும், "நமக்கு உம்மால் ஒரு காரியமும் இல்லை" என்ன; சிவனும் "உமக்கு ஒரு வரம் அருளவந்துளோம்" என்ன; ஆகில் "மோக்ஷம் தர வல்லனாகில் தந்து போ" என ஆழ்வார் விடை அளித்தார். அதற்க்கு சிவனும் "மோக்ஷம் முகுந்தனால் மட்டுமே தர வல்லதன்ரோ; வேறு கேளும்" என்ன, ஆழ்வாரும் "நீண்ட ஆயுசை தா" என்ன; சிவனும் "அது ஏற்கனவே எழுதப்பட்டது" என்ன, ஆழ்வார் "இந்த ஊசிக்கு பின்னே நூல் போகும்படி வரம் அருள்" என்று சாதித்தார்.  

இது கேட்டு சினம் கொண்ட சிவனும் தனது நெற்றி கண்ணினால் ஊழித் தீயை உருவாக்க, ஆழ்வாரும் தனது கட்டை விரலின் திருகன்னைத் திறந்து அதனினும் பெரிய ஊழித் தீயை உருவாக்க, சிவனும் உஷ்ணம் தாளாமல் ஆழ்வாரை அடிபணிந்து, அவருக்கு பக்தி சாரர் என விருதளித்து சென்றான். 

முதலாழ்வார்களுடன் சந்திப்பு 

பின்பு திருமழிசை ஆழ்வாரும் ஒருவரும் அறியா வண்ணம் ஒரு குகையினுள் சென்று பரம்பொருளை சிந்தை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற முதலாழ்வார்கள் இவரது தேஜஸை கண்டு இவருடன் கூடிக் களித்தனர். பின்பு இவ்வாழ்வார் அவ்விடம் விட்டகன்று சில காலம் திருவல்லிகேணியில் எழுந்தருளி மங்களாசாசனம் செய்து போந்தார்.

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் 

பின்பு இவர் திருமழிசையில் திருமண்காப்பு இல்லாமல் வாட திருவேங்கடமுடையான் இவரது கனவிலே தோன்றி, "கச்சியின் அருகிலே உள்ள பொற்றாமரையிலே உள்ளது" என காட்டிக் கொடுக்க, ஆழ்வாரும் அதை கொண்டு தரித்துக் கொண்டு, திருமழிசையிலே பகவத் அனுபவம் கொண்டு சில காலம் கழித்தார். பின்பு, அங்கு இருந்து காஞ்சிபுரத்துக்கு வந்து சேர்ந்து, திருவெக்காவில் கோவில் கொண்டு உள்ள, ஸ்ரீ யதோத்தகாரி எம்பெருமானை அடி தொழுது பல வருஷங்கள் அங்கே எழுந்தருளி இருந்தார். கனிகண்ணனும் அங்கு ஆழ்வாருக்கு கைங்கர்யங்கள் செய்து கொண்டு தேஹா யாத்திரையை நடத்தி வந்தார். ஒரு மூதாட்டி ஆழ்வார் உள்ள இடத்தில், அலகிடுதல், கோலமிடுதல் முதலான கைங்கர்யங்கள் செய்ய, அதைக் கண்டு ஆழ்வாரும் அகமகிழ்ந்து, வேண்டும் வரம் கேள் என்ன; அவளும் தான் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ன, ஆழ்வாரும் அப்படியே பிரசாதித்தார். 

அவளைக் கண்டு அந்நகரத்து அரசன் அவளை மணந்து கொண்டான். பின்பு அவளது இளமை என்றும் மாறாமல் இருக்கக் கண்டு, அதன் காரணம் என்ன என்று வினவ; அவளும் தான் ஆழ்வாரால் ஆசிர்வதிக்கபட்டதை கூறினாள். தானும் அவ்வாறு மாறுவதற்கு உபாயம் என்ன என்று அரசன் கேட்க, அவளும் தினந்தோறும் நமது அரண்மனைக்கு உஞ்சவ்ருத்திக்கு வரும் அவரது சிஷ்யரான கணிகண்ணன் மூலம் அவரை பற்றலாம் என, ராஜாவும் கணிகண்ணை நோக்கி உமது ஆழ்வாரை இங்கே அழைத்து வாரும் என்ன; ஆழ்வாரின் பிரபாவம் அறிந்த அவரும்; ஆழ்வார் ராஜ துவாரங்களில் புக்கு பிரவேசிக்க மாட்டார் என்ன; அரசனும் க்லேசிதிருக்க, அப்போது மந்திரிகள் கணிகண்ணன் மூலம் நீர் ஒரு பாடல் பெற்றால், உம்மாகும் மாறாத இளமை இருக்கும் என்ன; ராஜாவும் இசைந்து அவரை நிர்பந்திக்க, "நாம் மானிடம் பாடோம்" என கனிகண்ணனும் உள்ளது உரைக்க; பின்னே ராஜா அவரை மேலும் நிர்பந்திக்க, முடிவாக கீழ் வரும் பாவை அவர் பாடினார். 

"ஆடவர்கள் எங்ங்னகல்வாருள் சுரந்து, 
பாடகமுமூரகமும் பாம்பணையும் - நீடியமால்,
நின்றானிருந்தான் கிடந்தான் இதுவன்றோ 
மன்றார் பொழில் கச்சி மாண்பு."

இது கண்டு நீர் என்னை பாடாது ஊரை பாடினீர் என சினம் கொண்ட அரசன், அவரை நாட்டை விட்டு போகுமாறு கட்டளையிட்டான். அவரும் ஆழ்வாரை அடி தொழுது நடந்ததை கூறி நாம் புறபடுகிறோம் என்ன, ஆழ்வாரும் திருக்கோவிலுள் சென்று எம்பெருமானை தொழுது,

"கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி 
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய 
செந்நாப் புலவனும் போகின்றான் நீயுமுன்றன் 
பைந்நாகப் பாய் சுருட்டி கொள்." 

என்று விண்ணப்பிக்க, பெருமாளும் பைந்நாகப் பாய் சுருட்டி கொண்டு ஆழ்வாரை பின்தொடர்ந்தார். மூவரும் அன்று ஒரு இரவு காஞ்சி நகரத்துக்கு வெளியே கழித்தனர். பெருமாள் சென்றதனால் மற்ற தெய்வங்களும் நகரை விட்டு நீங்க, நகர் களை இழந்து நின்றது. ராஜாவும் தவறை உணர்ந்து கணிகண்ணரிடம் பொறை வேண்ட, அவரும் ஆழ்வாரை பிரார்த்திக்க, ஆழ்வாரும் பெருமாளை நோக்கி

"கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி 
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய 
செந்நாப் புலவனும் போக்கொழிந்தான் நீயுமுன்றன் 
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்"

என்ன, பெருமானும் இந்த சரித்திரம் தோற்றும் படி, முன்பு போல் அல்லாமல், இடத்திருக்கை கீழ்பட திருக்கண் வளர்ந்தருளினான். 

பெரும்புலியூர் அடிகள் 

பின்பு ஆழ்வார் திருக்குடந்தை நோக்கி புறப்பட, வழியில் பெரும்புலியூர் என்னும் ஊரை அடைந்தார். அங்கு இளைப்பு ஆறுவதற்காக ஒரு அந்தணரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தருள, இவரைக் கண்டு இவரின் வாசி அறியாதே, இவரது ஜாதியில் புத்தி கொண்டு, அவ்வீட்டிலே வேதம் ஓதிக் கொண்டு இருந்த அந்தணர்கள், அதை நிறுத்த; ஆழ்வாரும் தன் வழியே செல்ல முற்பட; மறுபடியும் அவர்கள் வேதம் ஓத முற்படும் போது பாகவத அபசாரத்தினாலே அவர்களுக்கு விட்ட இடம் மறந்து போக; ஆழ்வாரும் ரிஷி புத்ரர் ஆகையாலே; அவர்களுக்கு நினைவூட்டும் விதமாக ஒரு நெல்லை எடுத்து அதை நகத்தால் கீறிக் காட்ட, "க்ருஷ்ணானாம் வ்ருஹீனாம் ... " என அவர்கள் தொடர்ந்தனர்.

அப்பொழுது அவ்வூர் எம்பெருமான் இவர் செல்லும் இடமெல்லாம் இவரை நோக்கியே சேவை சாதிக்க; இது கண்ட அவ்வூர் பெரும்புலியூர் அடிகள் என்னும் தீட்சிதர் இவரது அதிசயத்தை உணர்ந்து அவர் நடத்தும் யாகத்திலே ஆழ்வாருக்கு அக்ர பூஜை கொடுத்தார். இதை கண்டு சிலர் எதிர்க்க, ஆழ்வாரும் தமது பிரபாவத்தைக் காட்டத் திருஉள்ளம் பற்றி,

"அக்கரங்கள் அக்கரங்கள் என்றும் ஆவதேன் கொலோ
இக்குறும்பை நீக்கிஎன்னை ஈசனாக்க வல்லையேல் 
சக்கரன்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட 
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே"

என்று வேண்ட, எம்பெருமான் தானும் ஆழ்வாருடைய திருமேனியிலே சேவை சாதிதருளினான். இது கண்ட அனைவரும் ஆழ்வார் திருவடிகளில் விழுந்து அபராத க்ஷாமரம் வேண்டி, ஆழ்வாரை கௌரவித்தார்கள். அதற்க்கு பின் ஆழ்வாரும் திருக்குடந்தையிலே மனம் சென்று அங்கு எழுந்தருளினார்.

திருக்குடந்தை 

திருமழிசை ஆழ்வாருக்கு கிடந்த திருக்கோலம் மீது மிகுகாதல் என்னலாம் படி ஆதாரம் இருக்கும். ஆழ்வார் திருகுடந்தை எம்பெருமானை மங்களாசாசனம் செய்ய எழுந்தருளிய போது, அவனது கிடக்கையாகிய வடிவழகுக்குத் தோற்று, அவனை நோக்கி "கிடந்தவாறு எழுந்திருந்து பேசு" என்ன, பெருமான் தானும் தனது ஆச்ரித பரதந்த்ரம் (அடியார் இட்ட வழக்காய் இருத்தல்) தோற்ற, அர்ச்சா சமாதியை கடந்து எழ முற்பட, ஆழ்வாரும் வியந்து "வாழி கேசனே" என மங்களாசாசனம் செய்தருளினார், இன்றும்  இது அனைவருக்கும் தெரியும் படி, திருக்குடந்தையில் பெருமான் "உத்தாயீசயனத் திருகோலத்துண்டே சேவை சாதிதருளுகிறான்.
 
இவர் பல திவ்ய பிரபந்தங்களை இயற்றி அவைகளை காவேரி வெள்ளத்தில் விட, திருச்சந்த விருத்தம்; நான்முகன் திருவந்தாதி என இரண்டு மற்றும் எதிர்த்து வர, அவை இரண்டையும் லோகார்த்தமாக ப்ரசாரபடுத்தினார். பல வருடங்கள் திருக்குடந்தையிலே இருந்து பின்பு அங்கு இருந்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.  

உரையிலிடாதவர்

இவரைக் குறிக்கும் போது ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் "உரையிலிடாதவர்" என அடைமொழி இட்டு அழைகிறார். (ஆச்சார்ய ஹ்ருதயம் 153). இதை விசத வாக் சிகாமணியான மணவாள மாமுனிகள் ஸ்ரீ சூக்தி கொண்டு அனுபவிப்போம்."உருவினவாள் உரையிலிடாதே ஆதிமத்யாந்தம் தேவதாந்த்ராவரத்வ பிரதிபாதன பூர்வமாக பகவத் பரத்வத்தை உபபாதிக்கும் திருமழிசைப்பிரான்". ராஜாக்கள் எப்படி சத்ருக்கள் ஒழிந்தாலும் அவர்களை பூண்டோடு அழிக்கும் வரை தமது வாட்களை உரையிலிடாரோ, அது போல இவ்வாழ்வாரும் ஆதி முதல் அந்தம் வரை ஸ்ரீமன் நாராயணனின் பரத்வதையே ஸ்தாபித்தார். அது கொண்டு இவருக்கு  "உரையிலிடாதவர்" என குறிப்பிடலாயிற்று. 

துய்ய மதி 

இவ்வாழ்வார் தாமே "என மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை" என கொண்டாடி பேசும்படியாயன்றோ இருப்பது. இவரது மதிக்கு "துய்ய" மதி என விஷேஷனம் இருக்கிறார் ஸ்ரீ மணவாள மாமுனிகள். மதிக்கு தூய்மையாவது; தேவதாந்த்ரங்கள் பக்கல் பரதவ புத்தி பண்ணாமல் இருப்பதே ஆகும். 
  1. துன்னு செஞ்சடை சிவன் நீதியால் வணங்கு பாத,
  2. உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்களித்த எம் வள்ளலாரை யன்றி,
  3. சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே,
  4. நான்முகனை நாராயணன் படைத்தான் (நா. தி 1)
  5. பிஞகன் தன்னோடு எதிர்வன் அவன் எனக்கு நேரான், (நா. தி 84)
  6. காகுத்தனல்லால் ஒரு தெய்வம் யானிலேன்,  (நா. தி 52)
  7. இனியறிந்தேன் ஈசர்க்கும் நான்முகர்க்கும் தெய்வம்  (நா. தி 96)
என  சாதிதருளியதால், இவரை "துய்ய மதி பெற்ற" என கொண்டாடுகிறார். 
[குறிப்பு: இந்த வரிசை கொண்டே ஸ்ரீ மணவாள மாமுனிகள் "ஆதிமத்யாந்தம்" என சாதிதாயிற்று]

திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம் 

No comments:

Post a Comment